Family

தற்பெருமை வாய்ந்த மன்னனின் திடுக்கிடும் இரகசியம்

மற்றும் உண்மை பேசிய புளிய மர முரசும்

Calendar

Published: 22 Jul 2021


Time taken : >15mins

மத்திய இந்தியாவில் வாழ்ந்த, தன்னைத்தானே அளவுக்கு அதிகமாக நேசித்த மன்னனைப் பற்றிய இந்தக் கிராமியக் கதையைப் படியுங்கள். ஒரு நாள் தூங்கி எழுந்த அவனுக்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. அதை மற்றவரிடமிருந்து மறைக்கும் எண்ணத்தில், தன் குடிமக்களைப் பயமுறுத்தி அதட்டினான். மன்னனின் இரகசியம் என்ன?

ஒரு தற்பெருமை வாய்ந்த மன்னன்

நீண்ட காலத்திற்கு முன்பு, தன் அழகான தோற்றத்துக்கு பெயர் போன மன்னன் ஒருவன் இருந்தான். அவன் கண்ணாடியிலோ அல்லது நீர் குளத்திலோ  தன் பிம்பத்தை பார்க்கும் வாய்ப்பை ஒருபோதும் விட்டுவிட மாட்டான்.

மன்னன் தன் ராஜாங்கத்தில் இருக்கும் மக்களின் நலத்தை பற்றி அக்கறை செலுத்தாமல் அவனது தோற்றத்தை பற்றி மட்டுமே அதிகமான அக்கறை செலுத்தினான். அவன் எப்பொழுதும் சிறந்த ஆடைகளையும் விலையுயர்ந்த நகை நட்டும் அணிந்திருந்தான். மேலும், அவன் தன் சிகை அலங்காரத்திலும் கவனம் செலுத்தினான். அவன் தினமும் தன் முடியை கழுவி, அது பளபளக்கும் வரை சீவினான். 

மன்னன் ஒரு கம்பீரமான/ வலிமையான  மயிலை போல கண்ணாடி முன்னாள் தன்னை சீவி சிங்காரித்து கொண்டிருந்த அதே வேளையில், அவனின் ராஜாங்கத்தில் இருந்த மக்கள் நாளுக்கு நாள் மேலும் மேலும் ஏழ்மையில் வாடினர்.

ஒரு நாள் மன்னனின் சபையிலிருந்த ஒரு அமைச்சர், “மாண்புமிகு மன்னனே , நீங்கள் உங்கள் ராஜாங்கத்திற்காக ஏதாவது செய்தே தீர வேண்டும். உங்கள் மக்கள் தினமும் வறுமையாலும் பசியாலும் வாடி கொண்டே இருக்கிறார்கள்”, என்று கூறினான்.

“என்ன முற்றிலும் அபத்தமாக பேசுகிறாய்! நமது ராஜாங்கம் செழிப்பானது. நமக்கு இருக்கும் அனைத்து செல்வச் செழிப்பையும் பார்”, என்றபடி தனது நகை நட்டையும்  மிகச்சிறந்த பட்டு துணியையும் சுட்டி காட்டினான். “இதற்கு மேல் மக்களுக்கு என்ன வேண்டும்? அவர்களுக்கு ஒரு அரசனுக்குரிய கம்பீரமான மற்றும் அழகான தோற்றம் உடைய மன்னனாகிய நான் கிடைத்துள்ளேன். உண்மையில், நான் அனைத்து கடவுள்களை விடவும் மிகவும் அழகானவன். என்னை போன்ற ஒரு மன்னன் கிடைத்திருக்க மக்கள் பெருமை கொள்ள வேண்டும்!” என்று சிரித்தப்படி கூறி தன் அமைச்சரின் ஆலோசனையை  புறக்கணித்தான் அந்த கர்வமிக்க மன்னன்.

ஆனால் மன்னன் அரியாத ஒரு விஷயம் அப்பொழுது நடந்தது. அதே நேரத்தில், அந்த பக்கம் வானத்தின் மேலே சென்று கொண்டிருந்த ஒரு கடவுள் மன்னன் பெருமையாக கூறியதை கேட்டுவிட்டான். மன்னன் தன்னை கடவுள்களுடன் ஒப்பிட்டு பேசியதையும் தன் மக்கள் மீது சிறிதளவு கூட கருணையின்றி நடந்து கொண்டதையும் கண்டு அந்த கடவுள் கோபம் அடைந்தான். நிச்சயமாக மன்னனுக்கு ஒரு பாடம் கற்பிக்க வேண்டும் என்று அந்த கடவுள் முடிவு எடுத்தான். அச்சமயம் ஒரு எருமைமாடு வயலில் மெய்வதை அவன் கவனித்தான். கடவுள் சிரித்தான். தற்பெருமை கொண்ட ஒரு சாதாரண மனிதனுக்கு ஏற்ற தண்டனை எது என்று அவனுக்கு தெரிந்துவிட்டது.

 

மறுநாள் காலை மன்னன் துயில் எழுந்தான். சிறப்பான உடைகளையும் நகைகளையும் அணிந்து தன் குடிமக்களுக்கு முன் பவனி வர தயாராகி கொண்டிருந்த வேளையில், “என் குடிமக்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள் அல்லவா?” என்று தனக்குத் தானே நினைத்துக்கொண்டான். 

மறுநாள் காலை மன்னன் துயில் எழுந்தான். சிறப்பான உடைகளையும் நகைகளையும் அணிந்து தன் குடிமக்களுக்கு முன் பவனி வர தயாராகி கொண்டிருந்த வேளையில், “என் குடிமக்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள் அல்லவா?” என்று தனக்குத் தானே நினைத்துக்கொண்டான். 

“என்ன… இது … என் தலையில் இருக்கும் இவை என்ன? நான்… இல்லை! எனக்கு என்ன நடக்கிறது?” என்று மன்னன் அலறினான்.

அவன் தலையின் இரு பக்கத்திலிருந்தும் எருமை மாட்டின் கொம்புகள் நீண்டு நின்றுகொண்டிருந்தன.

மன்னனுக்கு ஏதோ ஆபத்து நேர்ந்துவிட்டது என எண்ணி, மன்னனின் அறைக்குள் அரண்மனை காவலர்கள் விரைந்து நுழைந்தனர். உள்ளே நுழைந்த காவலர்கள் தலையை சுற்றி தலைப்பாகை அணிந்தபடி தக்காளிபோல் சிவந்த முகத்துடன் கோபமாக நின்ற மன்னனை கண்டனர்.

“வெளியே செல்லுங்கள்! எல்லோரும் வெளியே செல்லுங்கள்! என்னை தனியாக விடுங்கள்! இன்று நான் யாரையும் சந்திக்க மாட்டேன் என்று அரச சபையில் அறிவிக்கவும்! உடனே அரசு முடிதிருத்துபவனை கூப்பிடுங்கள்! அவனை தவிர வேறு யாரும் என் அறைக்குள் வர கூடாது,” என்று மன்னன் கோபத்துடன் கட்டளையிட்டான்.

அரசு முடிதிருத்துபவன் மன்னனின் அறைக்கு வரவழைக்கப்பட்டான்.

அரசு முடிதிருத்துபவன் வந்தான்…

அவன் உள்ளே நுழைந்ததும் மன்னன் தலையில் தலைப்பாகை அணிந்திருந்ததை கண்டான்.

“நான் உன்னிடம் ஒன்றை காட்ட போகிறேன். ஆனால், அதற்கு முன்னாள் நீ பார்த்ததை யாரிடமும் வெளிப்படுத்த மாட்டேன் என்று எனக்கு சத்தியம் செய்ய வேண்டும். இல்லையேல் உனக்கு சாட்டையடியும் தண்டனையும் கிடைக்கும்!” என்று மிரட்டினான் கலங்கி போன மன்னன்.

“சரி மன்னா. நான்… நான் சத்தியம் செய்கிறேன். நான் இதை பற்றி ஒருபோதும் வெளியே சொல்ல மாட்டேன்” என்று மன்னனின் அச்சுறுத்தலினால் பயத்தில் நடுங்கியபடி அரசு முடிதிருத்துபவன் பதில் கூறினான்.

தயக்கத்துடன் மன்னன் தன தலைப்பாகையை நீக்கினான். அவன் தலையிலிருந்த எருமை கொம்புகள் வெளியே எட்டி பார்த்தன.
முதலில் அரசு முடிதிருத்துபவன் மன்னனின் தலையை ஆச்சரியத்துடன் பார்த்தான். பிறகு மன்னனின் தோற்றம் எவ்வளவு வேடிக்கையாக இருந்தது என்பதை உணர்ந்தான். 

உடனே அவனுக்கு சிரிப்பு வந்தது. ஆனால், அவன் தனது சிரிப்பை அடக்கி கொண்டான். ஏனெனில் அவன் விடும் சிரிப்பு சத்தம் அவனுக்கு கண்டிப்பாக மரண தண்டனையாக மாறிவிடும் என்பது அவனுக்கு தெரியும்.

ஆதலால், அரசு முடிதிருத்துபவன் தன் வேலையை செய்ய ஆரம்பித்தான். அரசு முடிதிருத்துபவன் மன்னனின் தலையிலிருந்த கொம்புகள் வெளிப்படையாக தெரியாத வகையில் தன் பலத்தை கொண்டு மன்னனின் முடியை இழுத்து பிடித்து வெட்டி சீர்ப்படுத்தினான்.

மன்னன் கண்ணாடியில் தன் பிம்பத்தை வெகு நேரமாக முறைத்துப் பார்த்தான். ஒரு யுகம் போல் தோன்றிய நேரம் கடந்த பிறகு மன்னன் ஒரு நன்றி கூட கூறாமல் அரசு முடிதிருத்துபவனை வெளியே செல்ல உத்தரவிட்டான். ஆனால் அவன் வெளியே செல்லும் முன், “நான் கூறியதை நினைவில் கொள். இங்கு நடந்ததை பற்றி உன் உதடுகளிலிருந்து ஒரு வார்த்தை வெளியேறினாலும் அது உன் உயிருக்கு ஆபத்தாகிவிடும்,” என்று மன்னன் மறுபடியும் அவனை மிரட்டினான்.

மன்னனின் முடியின் கீழே கொம்புகள் ஒளிந்திருப்பதை அறிந்திருந்ததால் மன்னனின் மிரட்டலை பெரிதாக கருத்தில் கொள்ள அவனுக்கு கடினமாக இருந்தது. இருப்பினும் அவன் பயபக்தியுடன் தலை வணங்கியபடி மன்னனின் அறையிலிருந்து வெளியேறினான். 

பிறகு அரண்மனையிலிருந்து வெகு தூரம் சென்ற பிறகு அரசு முடிதிருத்துபவன் உரக்கக் கத்தி சிரித்தான். அவனால் தனது சிரிப்பை அதற்கு மேல் கட்டுப்படுத்தி கொள்ள முடியவில்லை. அவனது உரக்கமான சிரிப்பை கேட்ட கிராமத்து மக்கள் திரும்பி அவனைப் முறைத்துப் பார்த்தனர். அப்போது மன்னனின் மிரட்டல் அவனுக்கு ஞாபகம் வந்தது. உடனே சத்தமாக சிரித்தப்படி அவன் காட்டுக்குள் விரைந்து ஓடினான்.

அரசு முடிதிருத்துபவனால் ரகசியத்தை இதற்கு மேல் பூட்டி வைத்து கொள்ள முடியவில்லை. அவன் யாரிடமாவது அதை சொல்ல வேண்டும் என்று துடித்தான். ஏதேனும் ஒன்று! ஏதாவது ஒன்று! அவன் சுற்றி முற்றி பார்த்தான்.

அப்பொழுதுதான் அவன் ஒரு புளிய மரத்தை கண்டான். அந்த மரத்தின் தண்டில் தன் தலையை நுழைக்கும் அளவுக்கு ஒரு துவாரம் இருந்ததை அவன் அறிந்தான்.

அப்போது அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது. உள்ளீடற்ற புளிய மரத்துக்குள் மன்னனின் ரகசியத்தை மெல்லமாக கூறுவதாக முடிவெடுத்தான். ஏனெனில் மரத்திடம் ரகசியத்தை கூறுவது மன்னனுக்கு கொடுத்த சத்தியத்தையும் மீறும் செயல் அல்ல என்று அவன் நம்பினான். அந்த நம்பிக்கையோடு, அவன் மரத்தின் துவாரத்திற்குள் ரகசியத்தை கூறினான்.

“மன்னனுக்கு தலையில் கொம்புகள் உள்ளன!”

ரகசியத்தை வெளியே சொன்னதும் அவனுக்கு மன நிம்மதி கிடைத்தது. ஒரு சுமை இறங்கியது போன்ற உணர்வுடன் அவன் வீடு திரும்பினான்.

ஆனால் அன்று இரவு கடுமையான புயல் வீசியது. அரசு முடிதிருத்துபவன் மன்னனின் ரகசியத்தை அலறிய அதே புளிய மரத்தை அந்த புயல் வேரோடு பிடுங்கி எரிந்தது.

மறுநாள் காலை

வேரோடு பிடுங்கி எறியப்பட்டிருந்த புளிய மரத்தை தாண்டி சென்ற ஒரு முரசு செய்பவன் அதனுடைய வலுவான தண்டை பார்த்தான். அதை கொண்டு ஒரு சிறப்பான முரசை செய்யலமே என்று எண்ணினான்! அவன் மரத்தின் தண்டை அறுத்து வீட்டுக்கு தூக்கிச் சென்றான். அள்ளும் பகலும் உழைத்து அந்த முரசு செய்பவன் அந்த சாதாரணமான மரத்தண்டை அரச சபைக்கு ஏற்புடைய ஒரு அழகான முரசாக உருவாக்கினான்.

முரசு செய்பவன் முரசு தயாரானதும் அதை அரசு இசைக்கலைஞனுக்கு பரிசளித்தான்.  அந்த இசைக்கலைஞன் மன்னன் மற்றும் அவன் சபையிலிருந்த அனைவருக்கும் முரசை வாசித்து காட்ட அந்த முரசை அரச சபைக்கு கொண்டு சென்றான். மன்னன் அந்த முரசின் சத்தத்தை கேட்டு நிச்சயமாக மகிழ்ச்சி அடைவான் என்று அந்த இசைக்கலைஞன் எண்ணினான். 

அந்த நம்பிக்கையோடு இசைக்கலைஞன் முரசின் தலையை அடிக்க துவங்கினான். ஆனால் அவன் எதிர்பார்த்த தெளிவான “டும், டும், டும்” இசை அந்த முரசிலிருந்து வரவில்லை. அதற்கு பதிலாக “டும், டும்! மன்னனுக்கு டும், டும் தலையில் டும், டும் கொம்புகள் உள்ளது! டும், டும்!” என்ற வார்த்தைகள் அந்த முரசிலிருந்து ஒலித்தன.

மன்னன் திடுக்கிட்டான். அவமானத்தில் கூனி குறுகி போனான். தன் தலையை  பிடித்து அதன் மேல் இருந்த கொம்புகளை மறைக்க அவன் தீவிரமாக முயற்சி செய்தான். ஆனால் அவன் முயற்சிகள் வெற்றி அடையவில்லை. அவன் தன் முடியை பின்னால் சீவி தன் கொம்புகளை மறைக்க முயற்சி செய்த ஒவ்வொரு முறையும் அவன் கொம்புகள் மீண்டும் மீண்டும் வெளியே எட்டி பார்த்தன.

முரசிலிருந்துதான் அந்த வார்த்தைகள் வெளியே வருகின்றன என்பதை உணராத இசைக்கலைஞன் மீண்டும் முரசை வாசித்தான். மீண்டும், மன்னனின் ரகசியம் சபை முழுவதும் மட்டுமின்றி சபையின் வாயில்களையும் தாண்டி எதிரொலித்தன.

சபையிலிருந்த அனைவரும் சற்று நேரம் அதிர்ச்சியோடு பார்த்தனர். பிறகு ஒருவர் பின் ஒருவர் சிரிக்க ஆரம்பித்தனர். விரைவில் சபை முழுவதும் சிரிப்பு சத்தம் நிரம்பியது. மன்னன் வெட்கத்தில் தலை குனிந்து கண்களில் கண்ணீர் விம்ப நின்றான். “நிறுத்துங்கள்! நிறுத்துங்கள்! நான் உங்கள் மன்னன்! சிரிக்காதீர்கள். நீங்கள் அனைவரும் தண்டிக்கப்படுவீர்கள்!” என்று மன்னன் கதறினான். ஆனால் அவனது அலறல்கள் கடுமையான சிரிப்பு சத்தத்தில் மூழ்கி காணாமல் போனது.

அவமானப்பட்ட மன்னன் முரசை நோக்கி ஓடி, அதை இசைக்கலைஞனிடமிருந்து பிடுங்கி, அரண்மனையின் வாசலை தாண்டி வெளியே ஓடினான். அவனையும் அவன் கொம்புகளையும் பார்த்து கிராமத்து மக்கள்  கேலியாக சிரித்தனர். அவமானத்தில் சிவந்த முகத்தை மறைத்தபடி, மன்னன் கிராமத்தை தாண்டி விரைவாக ஓடினான்.

இறுதியாக மன்னன் கிராமத்தின் எல்லையை தாண்டி காட்டுக்கு வந்து சேர்ந்தான். அவமானத்தை மன்னனால் தாங்க முடியவில்லை. அவன் தனது ராஜாங்கத்தை விட்டு விலகி, தனிமையில் ஒரு அமைதியான வாழ்க்கையை நடத்த முடிவு செய்தான்.

பல வருடங்கள் கடந்த பிறகு …

மன்னனின் குணம் முற்றிலும் மாறிவிட்டது. அவன் தன்னுடைய வெளித்தோற்றத்தின் மீது அக்கறை காட்டுவதை நிறுத்திவிட்டு இயற்கையின் அழகை ரசிக்க ஆரம்பித்தான். அவன் தன்னை சுற்றி இருந்த மிருகங்கள் மரங்கள் மற்றும் தாவரங்கள் ஆகியவையோடு நிம்மதியாக வாழ்ந்தான். இதனால் அவன் ஒரு விவேகமான மனிதனாகவும் மாறினான்.
 
அவன் பல வருடங்களாக முயற்சி செய்து முரசு வாசிக்கும் கலையில் தேர்ச்சி பெற்றான். மன்னன் முரசை அழகாக வாசித்ததால் , அவனது ரகசியம் முரசிலிருந்து எதிரொலிக்கும் சத்தமும் நின்றது. அவன் வாசிக்கும் இனிமையான இசையை கேட்டு அந்த காட்டிலிருந்த ஆவிகள் கூட மகிழ்ச்சி அடைந்தன.

முதலில் கோபமாக இருந்த கடவுள் மன்னன் வாசித்த முரசின் இனிமையான தாள சத்தத்தையும் ஆவிகளின் மனுக்களையும் கேட்டு சாந்தம் அடைந்தான். கடவுள் மன்னனை மன்னித்து அவனின் கொம்புகளை நீக்கினான்.

ஒரு நாள், மன்னன் கொஞ்சம் தண்ணீர் அருந்த அருகிலிருந்த ஏரிக்குச் சென்றான். தண்ணீரில் தெரிந்த அவனுடைய பிம்பம் அவனின் கவனத்தை ஈர்த்தது. அவனுடைய வெளி தோற்றத்தின் மீது நீண்ட காலமாக அக்கறை செலுத்தாத மன்னன் முதலில் எந்த வித்தியாசத்தையும் உணரவில்லை. ஆனால் அவனுக்கு எதோ பிழையாக இருப்பது போல் தோன்றியது. மீண்டும் பிம்பத்தை பார்த்த மன்னன், தன் கொம்புகள் காணாமல் போனதை உணர்ந்தான். அவை மாயமாய் மறைந்துவிட்டன!

அதே கணத்தில், அவன் தனது பழைய சபை உறுப்பினர்கள் தன்னை நோக்கி சவாரி செய்வதைக் கண்டான். அவர்கள் பல ஆண்டுகளாக மன்னனை தீவிரமாக தேடி கொண்டிருந்தனர்! அவர்களுக்கு சீர்குலைந்திருந்த ராஜாங்கத்தை சீர் செய்து, ஆட்சி புரிய, அவர்களின் மன்னன் தேவைப்பட்டான்.

முதுமையடைந்த மன்னன், தன் ஆட்சி காலத்தின் ஆரம்பத்திலேயே தவறு செய்திருந்ததாக உணர்ந்தான். தன் தோற்றத்தின் மீது அதிக அக்கறை செலுத்தியிருந்த மன்னன், ஒரு மன்னனாக தன் மக்களுக்கு செய்ய வேண்டிய பொறுப்புகளை துறந்துவிட்டான். அவன் ஒரு நல்ல மன்னனை போல் நியாயமாக, நடுநிலை தவறாமல், பரிவுடன் என்றும் ஆட்சி செய்ததில்லை என்பதை உணர்ந்தான். அவன் செய்த தவற்றை அவன் திருத்திக்கொள்ள வேண்டும் என்று தீர்மானித்தான். ஆதலால், மீண்டும் தன் ராஜாங்கத்திற்கு மன்னனாக திரும்ப ஒப்புக்கொண்டான்.

முதலில் இருந்தே ராஜாங்கத்தை எப்படி சீராக ஆட்சி செய்திருக்க வேண்டுமோ அதே மாதிரி ஆட்சி செய்ய மன்னன் தன் ராஜாங்கத்திற்கு திருப்பினான்.

ஆனால் அவன் கற்று கொண்ட முக்கியமான பாடத்தின் நினைவூட்டலாக அந்த புளிய மரத்து முரசை எப்போதும் அவன் பக்கத்திலேயே வைத்துக் கொண்டான்.

ஒரு புத்திசாலி மன்னன்

உண்மையைப் பேசிய முரசு கர்வமிக்க மன்னனை ஒரு புத்திசாலித்தனமான ஆட்சியாளராக மாற்றியிருந்தது. அவனுக்கு இது ஒருபோதும் மறக்க முடியாத ஒரு பாடமாகும்.

 

படங்களை வரைந்தவர்: Teresa Leong Qin Xin


உங்களால் எத்தனை இந்திய தாள வாத்தியங்களின் பெயர்களை குறிப்பிட முடியும்? இந்திய தாள வாத்தியங்களை பற்றி தெரிந்துக்கொள்ள இந்த கையேடை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். பிறகு, டமாறு போன்ற சிறிய கையடக்க முரசை செய்ய கற்று கொள்ளுங்கள்.

இந்திய முரசுகளின் உலகம்